

தூத்துக்குடி,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர் நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம் மனை வழிபடுகின்றனர்.
இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, கடலில் புனித நீராடி துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று வந்தடைந்தவுடன் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவில் பூசாரியிடம் காப்பு அணிகின்றனர். அதன்பிறகு நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்ற னர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை. மதியம், இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
10-ம் திருநாளான 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
.
11-ம் திருநாளான 21-ந்தேதி அதிகாலையில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அம்மனுக்கு காப்பு களைந்தவுடன் பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடிக்கின்றனர். 12-ம் திருநாளான 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.