குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் புறப்பட்ட முத்தாரம்மன்

சூரசம்ஹாரத்தைக் காண குலசை கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் புறப்பட்ட முத்தாரம்மன்
Published on: 

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் விரதம் இருந்து வேடம் அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.

சூரசம்ஹாரம்

இந்த நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடக்கிறது. இதனை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

கனமழை

இதனிடையே குலசை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிம்ம வாகனத்தில் புறப்பட்ட முத்தாரம்மன்

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவப்பு பட்டு உடுத்தி வீரவாள், திருசூலத்துடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன், 10 கைகளில் திரிசூலம், வில், வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி சூரனை வதம் செய்ய புறப்பட்டுள்ளார்.

சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசை கோவிலில் குவிந்துள்ளனர். செண்டை மேளம் இசைக்க, பக்தர்களின், ‘ஓம் காளி.. ஜெய் காளி..’ கோஷத்துடன் மகிஷனை வதம் செய்ய கடற்கரை நோக்கி அம்பாள் புறப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com