

திருக்கோவிலூர்,
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நடுநாட்டு திருப்பதி என அழைக்கப்படும் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சாமி சன்னதிகள், கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
கடந்த 29-ந் தேதி கோவிலில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் பூமாதேவி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் தொடங்கின. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.