குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா- கால்நாட்டு வைபவம்

ஆனி கொடை விழா சிறப்பு நிகழ்ச்சிகள், ஜூலை 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளன.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி  கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியது
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கால் நாட்டுதலுடன் தொடங்கியது
Published on

தூத்துக்குடி,

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழாவிற்காக கால் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆனி பெருந்திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணியில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா (ஆனி கொடை விழா) ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனி கொடை விழா 14.7.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறுகிறது.

ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று (30.6.2026)) கால்நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நித்திய கால பூஜைகள் நடைபெற்றன. மதியம் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

கால் நாட்டப்பட்டது

அதை தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய கால் நாட்டப்பட்டது. கால்நாட்டு விழாவில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், குரங்கணி ஊர் பொதுமக்கள், திருக்கோவில் பணியாளர்கள் 60 பங்கு நாடார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.

ஆனி கொடை விழா நிகழ்ச்சிகள் ஜூலை 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளன. 13ம் தேதி திங்கள் கிழமை இரவு 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, பூஜை நடைபெறுகிறது. இரவு 2 மணிக்கு ஸ்ரீ நாராயண சுவாமி சின்ன சப்பரத்தில் எழுந்தருள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆனி கொடை விழா

14ம் தேதி நண்பகல் 1மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனையுடன் ஆனி பெருந்திருவிழா (கொடை விழா) நடைபெறும். கொடைவிழாவில் முத்துமாலை அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். அன்று இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இரவு 2 மணிக்கு வாணவேடிக்கை முழங்க, நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 21ம் தேதி செவ்வாய்க்கிழமை 8ம் நாள் கொடைவிழா நிகழ்ச்சியும், 1008 குத்து விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com