திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2-வது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில்  விடிய விடிய கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 9.52 மணியளவில் தொடங்கி நேற்று இரவு 11.08 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். காலையில் குறைந்த அளவிலான மக்களே கிரிவலம் சென்றனர்.

மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவை போலவே நேற்று இரவும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இரவில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தபடி இருந்தனர்.

முன்னதாக நேற்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மதியம் சுமார் 12 மணி வரையில் குறையாமல் அதிகமாக காணப்பட்டது. 2-வது நாளான நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பின்னர் வெயிலின் தாக்கத்தினால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது.

இருப்பினும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மீண்டும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேற்று இரவு 11.08 மணி வரையில் பவுர்ணமி இருந்ததால் நள்ளிரவு வரையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்களுக்கு கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர், அன்னதானம் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டது.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள், அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ரூ.50 கட்டணம் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனமாக ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மோர், வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், பிஸ்கெட், கடலை மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் முக்கிய பிரகாரங்கள், கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com