

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.
7-ம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசுக் காட்சி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி, சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசுக்காட்சி மண்டத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்தபின் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். அங்கு தெற்கு ரத வீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டன. சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.
மாலை மாற்றும் வைபவம் முடிந்ததும் சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றனர். பின்னர் இரவு ராஜ கோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீகமுறைப்படி வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் வீதி உலா வருகின்றனர்.