

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் திருவிளையாடல் லீலை நடைபெறும் முக்கிய உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலை தொடர்பான அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அவ்வகையில் இந்த உற்சவத்தின் 3-ம் நாளான இன்று மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த சிறப்பு லீலை காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாணிக்கம் விற்ற லீலை தொடர்பான புராண வரலாறு வருமாறு:-
மதுரையை வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் அரசனின் காமக்கிழத்தியரின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர்.
இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போதுதான், மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர்.
அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற தகவல்களையும் கூறினார். பின்னர் புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிஷேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார்.
இதற்கிடையில் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள். மேலும் அபிஷேகப்பாண்டியன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்றும் புராணம் கூறுகிறது.
திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (19-ந் தேதி) தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெறுகிறது.