

மதுரை,
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கோபுரத்தில் வர்ணம் பூசம் பணியும் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்றது.
இதையடுத்து கோவிலில் உள்ள உபசன்னதியில் சீரமைப்பு பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியை தவிர உள்ள சுமார் 415-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்கள், கொடிமரத்திற்கான பாலாலயம் பூஜை கடந்த மாதம் நடந்தது. அதில் நடராஜர், தூர்க்கை, லட்சுமி உள்ளிட்ட 415-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களை சித்திரமாக வரைந்து, அதில் அந்த தெய்வங்களை உருவேற்றினார்கள். பின்னர் அந்த பரிவார தெய்வங்களுக்கான பாலாஸ்தன கும்பாபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி, முருகன், விநாயகர் சன்னதியை தவிர மற்ற பரிவார சன்னதிகளின் மூலவர்கள் திரை போட்டு மூடப்பட்டனர். மேலும் வீரவசந்தராயர் மண்டபத்தில் 79 தூண்களும் நிறுவப்பட்டு, அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் கட்டமாக கும்பாபிஷேகத்திற்கான மூகூர்த்தகால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதற்காக பழைய திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்தானீகபட்டர்களால் மூகூர்த்தக்காலுக்கான பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது.
அதை தொடர்ந்து மேளதாளம் முழங்க, டங்கா மாடு, கோவில் யானை முன்னே செல்ல முகூர்த்தக்கால் ஆடி வீதிகளில் வலம் வந்தது. பின்னர் கோவிலின் ஈசான பாகமான ஆயிரங்கால் மண்டபம் அருகே வடக்கு, கிழக்கு ஆடி வீதி சந்திப்பில் காலை 11.40 மணிக்கு பட்டர்கள் வேதங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து விழா ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற உள்ளன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 150-க்கும் மேற்பட்ட யாககுண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.