

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும். நவராத்திரி விழாவையொட்டி கொலு மண்டபம், மீனாட்சி அம்மன் சன்னதி முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதன்படி முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார். அம்மனுக்கு முன்பு தண்ணீரில் விநாயகர் உருவம் வரையப்பட்டு இருந்தது..
இன்று (திங்கட்கிழமை) அர்த்தநாரீசுவரர் அலங்காரமும், நாளை கோலாட்டம், 14-ந் தேதி பட்டாபிஷேக திருக்கோலம், 15-ந் தேதி தபசு திருக்கோலம், 16-ந் தேதி ஊஞ்சல், 17-ந் தேதி முத்தங்கி சேவை, 18-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி, 19-ந் தேதி சிவ பூஜை செய்யும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
நவராத்திரியையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து கொலு அலங்கார கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 11 அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு சுவாமியின் சிலைகள், அம்மன் அவதாரம், திருவிளையாடல் புராண கதைகள், முருகன், விநாயகர், அஷ்டலட்சுமிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோபுரங்கள், பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மீனாட்சி அம்மன் மற்றும் கொலு அலங்காரங்களை கண்டு ரசித்தனர். திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.