நாளை மகா பரணி... முன்னோர்களின் ஆசி பெற எம தீப வழிபாடு

மகாளயபட்ச காலத்தில் பூலோகத்திற்கு வருகை தரும் பித்ருக்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது யம தீபம்.
முன்னோர்களின் ஆசி பெற எம தீப வழிபாடு
எம தீபம்
Published on: 

பித்ருக்கள் பட்சம் எனப்படும் மகாளய பட்சத்தில் திரிதியை தினமான நாளை ‘மகா பரணி’ அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் எம தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

முன்னோர் வழிபாடு

"மகா பரணி" என்பது புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திர தினமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்ம ராஜனின் நட்சத்திரம் ஆகும். மறைந்த முன்னோர்கள், அவரவரின் கர்ம வினைக்கேற்ப எமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க இந்த மகா பரணி நாளில் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதியாகும்.

எமதர்மனுக்கு உகந்த மகா பரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்ற செயல்களை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்லவேண்டிய முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.

வீடு தேடி வரும் முன்னோர்கள்

தட்சிணாயன புண்ணிய காலத்தில், புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சம் எனும் புண்ணிய காலத்தில், மறைந்த முன்னோர்கள் அவர்களின் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த மகாளய பட்ச காலத்தில் மகா பரணியில் எம தீபம் ஏற்றுவது மரபு. மரண பயம் அகலவும் துர் மரணத்தை தவிர்க்கவும் எமதர்ம ராஜனை வழிபட வேண்டும்.

மகாளயபட்ச காலத்தில் பூலோகத்திற்கு வருகை தரும் பித்ருக்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்". எனவே, அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.

எம தீபம் - பலன்கள்

எமதீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள் வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழிபடலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார்.

எம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, குடும்பத்திற்கு நலன்களை செய்வார்கள். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும், தொழில் முன்னேறும், திருமணத் தடைகள் விலகும், அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும் என்பது நம்பிக்கை. எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

வழிபடும் நேரம்

மகா பரணி நாளில் முன்னோர்களுக்கு நிதி கொடுப்பதன்மூலம், கயாவுக்கே சென்று திதி கொடுத்ததன் பலனை பெற முடியும். இந்த ஆண்டு பரணி நட்சத்திரம் செப்டம்பர் 29ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11.25 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் (செப்டம்பர் 30), காலை 10.15 மணி வரை உள்ளது. எனவே, முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதாக இருந்தாலும், திதி தர்ப்பணம் கொடுப்பதாக இருந்தாலும் காலை 11.30 மணிகு மேல் செய்யலாம். பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ராகுகாலம் உள்ளது. இந்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் வழிபாடு செய்வது சிறந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com