சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை

யாக பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை
Published on

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை நடைபெற்றது.

இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இதில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பூஜையில் நேரடியாக கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.

இந்த பூஜையினால் வியாபார வளர்ச்சி, செல்வம் சேர்க்கை, குடும்ப அமைதி, திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், முன்னோர்கள் வழி பாவம் தீரும் என்பது நம்பிக்கை.

யாக பூஜைக்கு முன்னதாக கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com