

கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக் கொடை விழா கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கடலில் புனித தீர்த்தமாடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக நாளை எட்டாம் கொடை விழா நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவின் தொடர்ச்சியாக 22ஆம் தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது.