

திருவொற்றியூர்:
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமநவமியை முன்னிட்டு 9 நாட்கள் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ராமநவமி உற்சவம் வரும் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழா நாட்களில் தினமும் காலை 10.30 மணிக்கு ராமபிரானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் வாகன சேவைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பகவான் ஸ்ரீராமர் எழுந்தருளி, பெரிய மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 27-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் ராமநவமி உற்சவம் நிறைவுபெறும்.
இதுதவிர பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1.4.2026 அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு திருமஞ்சனமும், மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் சேர்த்தி சேவையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.