

கபிஸ்தலம்,
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின்ரோட்டில் ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன..
யாகசாலை பூஜைகளின் நிறைவில், மேள, தாளங்களுடன் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர உச்சியை அடைந்தன. அதன்பின் ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.