பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் மந்திரகிரி வேலாயுதசுவாமி

கோவிலில் உள்ள கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து, வேலாயுதசுவாமி சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், செஞ்சேரிமலை, கோவை மாவட்டம், Arulmigu Manthiragiri Velauythaswami Temple, Senjerimalai
மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்
Published on

கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோவில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புபெற்ற தலமாகவும், திருப்புகழ் பாடப் பெற்ற தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது. இது, முருகப்பெருமானின் அறு படை வீடுகளுக்கு முந்தைய தலம் என்கிறார்கள்.

இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

மந்திர உபதேசம்

முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார மந்திரத்தை அவரது தந்தையான சிவபெருமான் உபதேசம் செய்த தலம் என்பதால் இத்தலத்து முருகப்பெருமான் 'மந்திர வேலாயுத சுவாமி' என்று அழைக்கப்பட்டார். பின்னர் மலையை குறிக்கும் 'கிரி' என்ற வார்த்தையுடன் 'மந்திரகிரி வேலாயுதசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோவிலில் உள்ள கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து, வேலாயுதசுவாமி சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிட்டும், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும், எதிரிகள் பயம் நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிரக தோஷம் நீங்கவும், மன நோயில் இருந்து நிவாரணம் பெறவும் இங்கு வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் ஆகியவற்றை ஜாதகத்துடன் வைத்து வழிபடுகிறார்கள்.

பூக்கேட்டல்

இத்தலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், தங்களின் எதிர்கால பலன்கள் பற்றியும், தொடங்கும் காரியம் சிறப்பாக நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 'பூக்கேட்டல்' எனும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். முருகப்பெருமானின் திருக்கரங்களில் வலது கையில் ஒன்றும், இடது கையில் ஒன்றும் என பூக்களை வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் வலது கையில் இருந்த பூ விழுந்தால், எண்ணிய காரியங்கள் விரைவில் வெற்றிபெறும் என்றும், இடது கையில் இருந்த பூ விழுந்தால் எண்ணிய காரியத்தில் தற்போது ஈடுபடவேண்டாம் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் பூ விழவில்லை என்றால் நினைத்த காரியம் நிறைவேற காலதாமதமாகும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com