புனித சலேத் மாதா கோவில் திருவிழா: தேர் பவனி

திருவிழா நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் வியப்பும் பரவசமும் அடைந்தனர்.
மெழுகுவத்தி ஏந்தி சப்பரத்தை சுற்றி வந்த பக்தர்கள்
மெழுகுவத்தி ஏந்தி சப்பரத்தை சுற்றி வந்த பக்தர்கள்
Published on

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டிபுதூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சலேத் மாதா திருத்தல திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு நவநாள் சிறப்பு வழிபாடு கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு புனித சலேத் மாதாவின் சிறிய மின் தேர் மற்றும் புனித சலேத் மாதா திரு உருவம் தாங்கிய கொடி ஆகியவற்றுடன் ஜெபமாலை பவனியும், தொடர்ந்து நவநாள் திருப்பலிகளும் நடைபெற்றன.

21-ஆம் தேதி வியாழக்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருவிழா நடைபெற்றது. இதில் புனித சலேத் மாதா, புனித பெரிய அந்தோணியார், உயிர்த்த ஏசு உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் எழுந்தருளிய மின் தேர் பவனி மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது.

நேற்று (23-ஆம் தேதி) பகல் பெரிய தேர் பவனி நடைபெற்றது. தேர் பவனியின் இறுதியில், புனித சலேத் மாதா எழுந்தருளிய சப்பரத்தைச் சுற்றி ஆண்கள், பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்கள் கைகளில் எரியும் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் படியிட்டு சுற்றி வந்து வழிபட்டனர். தொடர்ந்து ஆலயத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருப்பலி முடிந்த சில நிமிடங்களில், திருத்தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள பாறை பகுதியில் இருந்து திடீரென நீரூற்று பொங்கியெழுந்தது. அதே நேரத்தில், கோவிலின் தென்பகுதியில் உள்ள மற்றொரு இடத்திலும் நீரூற்று தோன்றியது. திருவிழா நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் இந்த அதிசயம் நிகழ்ந்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

நீரூற்று தோன்றிய செய்தியை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தலத்திற்கு திரண்டு வந்தனர். நீரூற்று தோன்றிய இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, ஜெபம் செய்து வழிபட்டனர்.

நீரூற்று

மறவபட்டிபுதூரி திருத்தல வளாகத்தில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதல் முறையாக சிறிய அளவிலான நீரூற்று தோன்றியது. கோடை காலத்திலும், மழையின்றி வறண்டு காணப்படும் இந்த மாதங்களிலும் தொடர்ந்து நீரூற்று தோன்றுவது பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 35 முறைகளுக்கு மேல் திருத்தலத்தைச் சுற்றி பல இடங்களில், குறிப்பாக பட்டியல் கற்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது நீரூற்று ஏற்பட்டு வருகிறது. இதனை அன்னையின் அருளின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

அதிசய நீரூற்று தோன்றியுள்ளதால் மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருத்தலம் தற்போது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com