

சென்னை,
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் கோவில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.