

மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.
தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா? அந்த வகையில் மாசி பூச நட்சத்திர நாளும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து வாழ்வில் வெற்றியை பெற உதவும்.
மாசி பூச நட்சத்திர தினமான இன்று, அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குவதுடன், விரும்பிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சம் அரச மரம். அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு மாசி மாத பூச நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) காலை 9.52 மணிக்கு தொடங்குகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.53 மணிக்கு நிறைவடைகிறது.
பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும். பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா.
ஆகவே மேற்கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே வழிபாடு செய்வதும், தினமும் பார்த்து தியானம் செய்வதும் நல்ல வழிகாட்டுதலையும், நல்ல சிந்தனையையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் கொடுக்கும்.