கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா: மார்ச் 4-ந்தேதி நடக்கிறது

வருஷாபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு வைரக்கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்படாததால் வருஷாபிஷேக விழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

கும்பாபிஷேக நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு துவிதியை திதியும் உத்திரம் நட்சத்திரம் கூடிய தினமான மார்ச் 4-ந்தேதி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Also Read
வெள்ளூர் சிவன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

அதன்படி வருகிற 4-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் கணபதி ஹோமமும் நவகலச பூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் (சோடச அபிஷேகம்) நடக்கிறது. அதன்பிறகு கலசாபிஷேகம் நடக்கிறது. கலசாபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்துகிறார்கள்.

பின்னர் உச்சி கால பூஜையும் உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது அதனைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடக்கிறது.

Also Read
ஆறுமுகநேரியில் பா.ஜனதா நடத்திய பிரமாண்ட குபேர பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

வருஷாபிஷேகத்தையொட்டி வைரக்கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிந்து, சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகார புறப்பாடு, அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை மற்றும் ஏகாந்த தீபாராதனை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com