

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் மறுநாள் மாசி அமாவாசையில் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த பிப்ரவரி 15ந் தேதி மகா சிவராத்திரி நாளில் கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின்னர் அபிஷேக ஆராதனையும், சக்தி கரகமும், அம்பாள், வீரபத்திரர் வீதிஉலா காட்சியும் பேச்சியம்மன் புறப்பாடும் நடைபெற்றது.
மாசி அமாவாசை தினமான நேற்று காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்துடன் அன்னம் வாகனத்தில் அம்பாள் மற்றும் அகோர வீரபத்திரர் சுவாமிகள் வீதிஉலா காட்சி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மேல் கோவிலின் எதிரே உள்ள மயானத்தின் முன்பு அம்மனை எழுந்தருள செய்தனர். அப்போது பக்தர்கள் விரதம் இருந்து வேகவைத்த கிழங்கு மற்றும் தானிங்கள், மயானத்தில் வாழை இலையில் கொட்டி வைக்கப்பட்டன. பின்னர் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை இலையில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தர்கள் அள்ளி சென்றனர். இந்த கிழங்குகளை வாங்கி சாப்பிட்டால் பில்லி சூனியம் விலகும், மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
மயான கொள்ளைக்கு பின்னர் பெண்கள் கோவில் வளாகத்தில் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகங்கள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.