

மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதீனத் திருமடத்தில் (தருமை ஆதீனம்) உள்ள ஞானபுரீசுவரர் கோவிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இரண்டு தேர்களில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் எழுந்தருளச் செய்யப்பட்டனர். பின்னர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. கீழ வீதியில் இருந்து பறப்பட்ட தேர் ஆதினத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர். கோவில் யானை, தேரை முட்டி தள்ளி, பக்தர்களுக்கு உதவியது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் நீர்மோர் வழங்கினார்.
விழாவின் அடுத்த நிகழ்வாக நாளை அதிகாலை தருமபுரம் ஆதீனம் வெள்ளிப் பல்லக்கில் ஆதின குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். நாளை மறுநாள் இரவு 8 மணி அளவில் ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, அவரை பக்தர்கள் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வரும் பட்டண பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது.