மயிலாடுதுறை: சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் பழமைவாய்ந்த சம்பந்தர் கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் தங்கியிருந்து, சுவாமி-அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்திய தலம் என்பதால் இக்கோவில் சம்பந்தர் கோயில் என போற்றப்படுகிறது.

ஆன்மிக சிறப்புக்குரிய இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்யப்பட்ட நிலையில், யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகளின் நிறைவில் பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து விமான கோபுரத்துக்கு சென்றனர்.

அங்கே வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என பக்தி கோஷங்கள் எழுப்ப, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கருவறையில் உள்ள மூலவருக்கு புனித நீரை ஊற்றி மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com