

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. அதனை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கி அந்த பணிகள் தாமதமாகி கொண்டிருந்தது. மேலும் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தவும் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் வீரவசந்தராயர் மண்டப பணிகளை முடிக்காமல் கும்பாபிஷேகத்தை நடத்த கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். எனவே மண்டப பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி தற்போது மண்டபத்தில் உள்ள 73 தூண்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 தூண்கள் பொருத்தும் பணி இந்த மாத இறுதியில் நிறைவு பெறும். இதன் மூலம் மண்டப பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி மற்றும் வெளிபுரத்தில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்றது. எனவே கோவிலில் உள்ள உப சன்னதியில் சீரமைப்பு பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியை தவிர கோவிலில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களுக்கான பாலாலய பூஜை நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதில் நடராஜர், துர்க்கை, லட்சுமி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களை சித்திரமாக வரைந்து, அதில் அந்த தெய்வங்களை உருவேற்றுவார்கள். அதன்பின்னர் பரிவார தெய்வங்கள் உள்ள சன்னதிகளில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். பாலாலய பூஜைக்கான யாகசாலை பூஜைகள் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் பட்டர் தலைமையில் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடு நடந்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன.