

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 11.25 மணி அளவில் தொடங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல காலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பகலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து விடிய விடிய கிரிவலம் சென்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை பவுர்ணமி திதி 10.09 மணி வரையில் இருந்ததால், இன்று காலை வரையில் பக்தர்களின் கிரிவலம் நீடித்தது.
இதேபோல் கோவிலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையிலான போலீசார் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலம் சென்ற பக்தர்கள் பெரும்பாலானோர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி விட்டு தங்கள் கிரிவலத்தை தொடங்கினர். இதனால் ராஜகோபுரம் முன்பு தேரடி வீதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரையில் திருவண்ணாமலையில் மழை பெய்தது. பின்னர் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி கிரிவலம் சென்றனர். அவர்களுக்கு கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட் டது.
கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை டவுன் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இருந்து மிதமான மழை பெய்தது. ஆனாலும் பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் மழை கோட் அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் தொடர்ந்து கிரிவலம் சென்றனர்.