சென்னை மண்டலங்களில் 50 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை 3,707 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சென்னை மாநகர் மற்றும் புறநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலங்களை சேர்ந்த கோவில்களில் தற்போது நடைபெற்று வரும் திருப்பணிகள், மரத்தேர், தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள், திருக்குளங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் கோவில்களில் காலி பணியிடங்களை நிரப்பிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை 3,707 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் 8 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மண்டலங்களில் 50 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்' என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோவிலில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் ரதிவர்ஷினிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.






