மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் முடவன் முழுக்கு விழா: அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடத்தப்படுகிறது.
முடவன் முழுக்கு விழா, அஸ்திர தேவருக்கு அபிஷேகம்
அஸ்திர தேவருக்கு அபிஷேகம்
Published on: 

முடவன் முழுக்கு விழாவை முன்னிட்டு காவிரி துலாக் கட்டத்தில் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

முடவன் முழுக்கு விழா

துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களிலிருந்து விடுபட்டதாக ஐதீகம்.

முன்பு ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்கமுடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை. அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்து விடுகிறது. இதனால் மனமுடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்ததால், அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடத்தப்படுகிறது.

அஸ்திர தேவருக்கு அபிஷேகம்

அவ்வகையில் இந்த ஆண்டு மயிலாடுதுறையில் துலா உற்சவம் நேற்று கடைமுழுக்கு தீர்த்​தவாரி உற்சவத்துடன் நிறைவுபெற்ற நிலையில், இன்று முடவன் முழுக்கு விழா நடந்தது.

இதையொட்டி மாயூரநாதர் கோவிலில் இருந்து எழுந்தருளிய மனோன்மணி உடனான சந்திரசேகர சுவாமிக்கு, காவிரி துலாக் கட்டத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட போர்வெல் தண்ணீரில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். பின்னர் சுவாமி - அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

X