

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா நேற்று தொடங்கியது. விழாவில் வருகிற 29-ந் தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாட்கள் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா விமர்ச்சியாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் உற்சவ விழா நேற்று தொடங்கியது.
இந்த திருவிழா வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சலாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல வருகிற 29-ந்தேதி வரை தினமும் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுடன் புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதி முப்பழ பூஜை நடக்கிறது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள், சத்திய கீரிசுவரர், பவளக்கனி வாய்பெருமாள் ஆகிய 5 சன்னதியிலும் பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைக்கப்பட்டு விசேஷ பூஜையும் மகாதீப, தூப ஆராதனையும் நடக்கிறது. மற்ற சன்னதிகளிலும் சுவாமி-அம்பாளுக்கு முப்பழம் படையல் பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.