

நாகப்பட்டினம்,
நாகை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.
நாகை காடம்பாடி பச்சை பிள்ளைகுள வடகரையில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மகாபாரத நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பூச்சொரிதல், கொடியேற்றம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் பிறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறுநாள் 25-ம் தேதி வில்வளைப்பு, திருக்கல்யாணம், 26-ம் தேதி சூதாட்டம், துகிலுரிதல், தபசு, 27-ம் தேதி வனவாசம் கதை, மாடு பிடி, சண்டை, 28-ம் தேதி கிருஷ்ணன் தூது, 29-ம் தேதி அரவான் களப்பலி நாடகம், 30-ம் தேதி கர்ணன் மோட்சம் படுகளம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று மாலை நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும், இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சந்தன காப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர்.