

ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. முன்னதாக காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து நம்பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளியபின் முன் மண்டபத்தை சேர்ந்தார்.
அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பங்குனி உத்திர சேர்த்தி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அதேபோல தாயார் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மதியம் 21.5 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி சேவை மண்டபத்தை வந்தடைந்தார் அங்கு மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இன்று இரவு சப்தாவரனமும் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறும். இத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகின்றது.