திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்.. கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

அறிவு, ஞானம் மற்றும் கல்வியின் வடிவமான சரஸ்வதி தேவி அலங்காரத்தில் எழுந்தருளிய பகவானின் தெய்வீக தோற்றம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம். கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி
Published on: 

திருமலை,

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று நடைபெற்ற வாகன சேவையில், மலையப்ப சுவாமி கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.

2-வது நாளான நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா (அன்ன வாகனம்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்.. கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

மாடவீதிகளை அலங்கரித்த கலைநிகழ்ச்சிகள்

அறிவு, ஞானம் மற்றும் கல்வியின் வடிவமான சரஸ்வதி தேவி அலங்காரத்தில் எழுந்தருளிய பகவானின் தெய்வீக தோற்றம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாகன ஊர்வலத்தின்போது நான்கு மாட வீதிகளிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வாகன சேவையைக் கண்டு தரிசித்தனர்.

திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி சி.எச். வெங்கய்ய சௌத்ரி, வாரிய உறுப்பினர்கள் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பனபாக லட்சுமி, தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் இந்த வாகன சேவையில் பங்கேற்றனர்.

அன்ன வாகனம்- ஞானத்தின் சின்னம்

அன்னப் பறவையானது (ஹம்சம்) அறிவு மற்றும் ஆன்மீகப் பகுத்தறிவின் குறியீடாகத் திகழ்கிறது. நீரிலிருந்து பாலைப் பிரித்தெடுக்கும் அதன் திறன், உண்மைக்கும் மாயைக்கும் இடையிலான வேறுபாட்டை உணரும் ஆற்றலைப் பிரதிபலிப்பதாக நம்பிக்கை.

ஆன்மீக ஞானம் பெற்ற சான்றோர்களை உபநிடதங்கள் 'பரமஹம்சர்கள்' என்று குறிப்பிடுகின்றன. அகங்காரத்தை நீக்கி, பக்தர்களை ஞானம், ஆன்மீக உணர்தல் மற்றும் பிரம்ம பதம் ஆகியவற்றை நோக்கி வழிநடத்துவதற்கான பகவானின் அருளை 'ஹம்ச வாகனம்' உணர்த்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com