நவராத்திரி விழா நிறைவு.. திருவனந்தபுரத்தில் இருந்து குமரி திரும்பிய உற்சவர்களுக்கு பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு

உற்சவர்கள் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடைந்தபோது அங்கு வைத்து கேரளம் மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
நவராத்திரி விழா நிறைவு, கேரளாவில் இருந்து குமரி திரும்பிய உற்சவர்களுக்கு பக்தர்கள் வரவேற்பு
யானையில் இருந்து இறக்கப்பட்ட சரஸ்வதி தேவி, ஆறாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி
Published on: 

கன்னியாகுமரி,

திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவிற்கு சென்ற குமரி மாவட்ட கோவில்களின் உற்சவமூர்த்திகள் அங்கிருந்து திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நிர்வாக காரணத்திற்காக 1840-ஆம் ஆண்டு இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய சாமி விக்ரங்கள் (உற்சவர்கள்) பல்லக்கிலும் மற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் விக்ரகம் யானை மீதும் பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக யானை, வெள்ளி குதிரை வாகனம் மற்றும் அலங்கார ரதங்கள் ஊர்வலமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கு 10-நாள் நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு உற்சவர்களை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

நவராத்திரி விழா

அதுபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதியம்மன் உற்சவ மூர்த்திகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பாரம்பரிய முறைப்படி மன்னர் உடைவாள் மாற்றி இரு மாநில போலீஸ் மரியாதையுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 12-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் இந்த உற்சவர்கள் பங்கெடுத்த பின்னர், நேற்று முன்தினம் குமரி மாவட்டத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

உற்சாக வரவேற்பு

வரும் வழியில் நெய்யாற்றங்கரையில் ஒருநாள், குழித்துறையில் ஒரு நாள் என இரண்டு இரவுகள் தங்கிவிட்டு இன்று காலை குழித்துறை மகாதேவர் கோவிலில் இருந்து புறப்பட்டனர். மார்த்தாண்டம், சாமியார் மடம், அழகிய மண்டபம், பரைக்கோடு, மணலி, சாரோடு வழியாக வந்த சாமிகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பத்மநாபபுரம் கோட்டை வாசல் வந்த சாமிகளுக்கு, பத்மநாபபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் தால பொலிவேந்தி மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மூன்று உற்சவர்களில் வேளிமலை முருகன் பத்மநாபபுரம் மேற்கு தெரு, வடக்கு தெரு வழியாக குமாரகோவிலுக்கு புறப்பட்டு சென்றார். சரஸ்வதி தேவியும் முன்னுதித்த நங்கை அம்மனும் தெற்கு தெரு வழியாக தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அப்போது அங்கு வைத்து கேரளம் மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

தேவிக்கு மரியாதை செலுத்திய யானை

அதன்பின் சாமி ஊர்வலத்தில் கொண்டு சென்ற மன்னரின் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டன. சரஸ்வதி தேவி உற்வவர், யானையின் மீதிருந்து கீழே இறக்கப்பட்டார். சரஸ்வதி தேவி விக்ரகத்தை சுமந்து வந்த வல்லவன் யானை துதிக்கையை உயர்த்தி தேவிக்கு மரியாதை செய்ததை பார்த்த பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அங்கிருந்து புறப்பட்டு நீலகண்ட சாமி கோவிலுக்கு சென்றடைந்தார்.

சரஸ்வதி தேவிக்கு அரண்மனை வளாகத்தில் உள்ள ஒமப்புரை குளத்தில் வைத்து ஆறாட்டு நடத்தப்பட்டு தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் கருவறையில் வைக்கப்பட்டு தேவிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு நீலகண்ட சாமி கோவிலில் தங்கியிருக்கும் முன்னுதித்த நங்கையம்மன் நாளை அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் நோக்கி செல்கிறார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com