

நெல்லை,
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவின் ஒரு பகுதியாக, செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, வீதி உலா நடந்து வருகிறது.
9-ம் திருநாளான நேற்று அதிகாலையில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. புனர் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து அம்பாள், சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது.
காலை 8 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பெண்கள் கலந்துகொண்டு 'ஓம் சக்தி பராசக்தி' என்ற பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தைத் தொடர்ந்து அம்பாளுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் அம்மன் சிவபூஜை செய்தல், இரவில் சப்தாவர்ணம், தந்த பல்லக்கு வீதி உலா வருதல் நடந்தது.
இன்று (புதன்கிழமை) காலை, அம்பாள் தந்த பல்லக்கில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும் நடக்கின்றது. இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்று அடைகிறார்.நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு. சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வருதல், 9-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா வருதல் நடக்கின்றது.