திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் காமாட்சி அம்மன் சண்டி யாகம் தொடக்கம்

தொடர்ந்து 9 நாட்களுக்கு சண்டி பாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடத்தப்படுகின்றன.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் காமாட்சி அம்பாள் சண்டி யாகம்
காமாட்சி அம்பாள் சண்டி யாகம்
Published on: 

திருப்பதி,

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக காமாட்சி அம்பாளின் 9 நாள் சண்டி யாகம் நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஒரு மாத காலம் நடைபெறும் கார்த்திகை ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக ஹோமம், திங்கட்கிழமை தட்சிணாமூர்த்தி சுவாமி ஹோமம், செவ்வாய்க்கிழமை காலபைரவர் ஹோமம் விமரிசையாக நடைபெற்றது. பக்தி பாரம்பரிய சடங்குகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவில் துணை அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சண்டி யாகம்

இந்த உற்சவத்தின் அடுத்தகட்டமாக, காமாட்சி அம்பாளின் 9 நாள் சண்டி யாகம் நேற்று வெகுவிமரிசையாக தொடங்கியது. நேற்று காலை சிறப்பு பூஜைகள், தினசரி ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் ஹோமத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பாரம்பரிய உடைகள் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 9 நாட்களுக்கு சண்டி பாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடத்தப்படுகின்றன.

யாகத்தில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி குமரி தேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ காமாட்சி அம்மன் சண்டி யாகத்தில் கிருஹஸ்தர்கள் (தம்பதியர்) ரூ.500 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.

X