கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ‘பானகம்’ நைவேத்தியம்.. 15-ந்தேதி தொடங்கி 60 நாட்கள் சிறப்பு பூஜை

தினமும் மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பகவதி அம்மன்- பானகம் நைவேத்தியம்
பகவதி அம்மன்- பானகம் நைவேத்தியம்
Published on

கன்னியாகுமரி,

பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல்காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானகம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டைத் தணித்துக் கொள்வார்கள்.

இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக பல்வேறு கோவில்களில் பானகம் (பானக்காரம்) என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பின்னர் அந்த பானகம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அவ்வகையில், கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் "பானகம்" நைவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. எலுமிச்சம்பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவதுதான் "பானகம்" ஆகும்.

இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான வருகிற 15-ந்தேதி முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானகம் படைக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பானகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் பானகம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Also Read
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை
பகவதி அம்மன்- பானகம் நைவேத்தியம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com