

மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி பெருவிழா இன்று தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக துவஜாரோகணம் எனும் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்தில் கருட பகவான் உருவம் பொறித்த கொடியை வேத மந்திரங்கள் முழங்க தீட்சிதர்கள் ஏற்றினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராஜகோபால சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
18 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக, வரும் 17 -ந் தேதி தங்க சூரியபிரபை வாகன சேவையும், 19-ந் தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும், 23- ம் தேதி வெண்ணெய்தாழி உற்சவமும் நடக்கிறது. அன்று இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 24-ந் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழா நடைபெறும். இறுதி நிகழ்வாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத் திருவிழா ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.