

சென்னை,
சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, சூரியபிரபை, சந்திரபிரபை, தியாகராஜர் வீதி உலா நடைபெற்றது. 25-ம் தேதி அதிகார நந்தி சேவை, பூத வாகனம், திருபவனி, நடைபெற்றது. தொடர்ந்து, புருஷா மிருக வாகனம், நாக வாகனம் வீதி உலாவும், நேற்று காலை தொட்டி விழா, பஞ்சமூர்த்தி கள்வீதி உலாவும் நடைபெற்றது. இன்று யானை வாகன பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (29-ம் தேதி) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 30-ம் தேதி பரிவேட்டை விழாவும், 31-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கின்றன. 11-ம் நாள் விழாவான ஏப்.2-ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப விழாவும், அதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி விமானத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, நாளை (29-ம் தேதி) தேரோட்டமும், 30-ம் தேதி அறுபத்து மூவர் விழாவும், ஏப்.1-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.