ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற பங்குனி தேரோட்டம்

தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
பங்குனி தேரோட்டம்
பங்குனி தேரோட்டம்
Published on

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடந்தது. கடந்த 27-ந் தேதி தங்க கருட சேவையும், 29-ந் தேதி உறையூரில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவையும், 30-ந் தேதி உபநாச்சியாளர்களுடன் நெல் அளவு கண்டருளும் வைப்பவம் நடைபெற்றது.

கடந்த 1-ந் தேதி நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இந்த சேவை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் நிகழ்வாகும். நம்பெருமாள் தாயாரும் ஒருசேர எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. எனவே, அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை
நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை

விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என கூறப்படும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.45 மணியளவில் தேரில் எழுந்தருளினார். காலை 8 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ரங்கா !... கோவிந்தா!...’ என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. அப்போது தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுபாதுகாப்பு போடப்பட்டது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு சந்தன மண்டபம் வந்தடைந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சந்தன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளியபின் நள்ளிரவு 1 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதியுலா வருவதுடன் பங்குனி தேர் திருவிழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com