பங்குனி உத்திரம்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா

திருவாரூர் தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும்.
திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம் காண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம் காண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
Published on

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் கடந்த 29-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், கோவிலின் மற்றுமொரு விசேஷ நிகழ்வான பாத தரிசனம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. பங்குனி உத்திர தினமான இன்று தியாகராஜர் தனது இடது பாதத்தை பக்தர்களுக்கு காட்டியருளினார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து இறைவனின் திருப்பாதத்தை தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிஷேகம், நடராஜர் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவாரூர் தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனமும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். இறைவனின் பாதம் மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com