பங்குனி உத்திர திருவிழா.. கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.
ஆறுமுகநேரியில சுப்பிரமணியர்-வள்ளி திருக்கல்யாண வைபவம்
ஆறுமுகநேரியில சுப்பிரமணியர்-வள்ளி திருக்கல்யாண வைபவம்
Published on

பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இறை வழிபாட்டிற்கு உகந்த இந்த நன்னாளில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண உற்சவங்கள், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாள் என்பதால் இந்த நாளில் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். பங்குனி உத்திர நாள் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால் பலர் குல தெய்வ கோவிலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். குல தெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

ஆறுமுகநேரி சிவன் கோவில்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் யாக பூஜை , சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன. பின்னர் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பாணாவரத்தில் சுப்ரமணியசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம்
பாணாவரத்தில் சுப்ரமணியசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம்

பாணாவரம் முருகன் கோவில்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம், பாணாவரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நேற்று காலையில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில், பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்ரமணியசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் சக்திவேல் முருகன் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பாணவரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com