திருமலையில் பாரிவேட்டை உற்சவம்

பெருமாளின் சுவாரசியமான வேட்டைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் பாரிவேட்டை உற்சவம் நடத்தப்படுகிறது.
பாரிவேட்டை உற்சவம்
பாரிவேட்டை உற்சவம்
Published on: 

திருமலை,

திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் நாளில் பாரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதேபோல் மகர சங்கராந்திக்கு பிறகு அதிக தெலுங்கு மாத நாட்களின்போது நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு பிறகும் பாரிவேட்டை உற்சவம் நடத்தப்படுகிறது.

பெருமாளின் சுவாரசியமான வேட்டைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், கோவிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள பாரிவேட்டை மண்டபம் அருகே இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த உற்சவம் வைபவ உற்சவ மண்டபத்தில் வைத்து நடத்தப்படும்.

வேட்டையாடிய மலையப்ப சுவாமி

கடந்த 12-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்தது. அதன் மறுநாளான நேற்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை முதலே மழை பெய்ததால் திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக மலையப்ப சுவாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வைபவ உற்சவ மண்டபத்தை அடைந்தார். அங்கு மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஆஸ்தானமும் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உற்சவர் மலையப்ப சுவாமி வேட்டையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மலையப்ப சுவாமி சார்பில், பிரதான அர்ச்சகர் ஒருவர் வேட்டையாடும் சடங்கை செய்தார். கையில் வேல் ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு புலியை வேட்டையாடுவதுபோல் நடித்து காட்டினார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com