திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
Published on

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் திருப்பதியில் இருந்து புறப்பட்டு திருத்தணி சென்றனர்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், இணை ஆணையர் ஜானகி, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தேவஸ்தான அதிகாரி வருகை

கோவில் அருகில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு பிரசாதம், பூ, பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா.ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் தங்களின் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர். பட்டு வஸ்திரங்களை சுப்பிரமணியசாமி கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்று முருகனுக்கு அணிவித்தனர்.

இதையடுத்து முத்தாடா. ரவிச்சந்திரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com