

பேராவூரணி,
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்து, அதன்பின்னர் மற்ற ராசிக்கு இடம்பெர்கிறார். இது சனிப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த சனிப்பெயர்ச்சி மற்றும் கிரக நிலையைப் பொருத்து, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான பலன்கள், கணிக்கப்படுகின்றன.
அவ்வகையில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா நாளை (6.3.2026) நடைபெற உள்ளது. நாளை காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். சனிப்பெயர்ச்சி நேரத்தை கணக்கிட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீஸ்வரா் கோவிலில் நாளை சனிப் பெயா்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
விளங்குளத்தில் உள்ள இக்கோவில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இங்கு சனீஸ்வர பகவான் மந்தா தேவி, ஜேஷ்டா தேவி சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா். திருமணத் தடை போன்ற தோஷ நிவா்த்தி தலமாக விளங்குகிறது.
பட்டுக்கோட்டையிலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனைச் சாவடியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல், பெருமகளூா் வழியாக 20 கி.மீ தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.