சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

முதலில் அர்ச்சகர் கரகத்துடன் பூக்குழி இறங்கியதையடுத்து மற்ற பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, தீமிதி நிகழ்ச்சி
கரகத்துடன் பூக்குழி இறங்கிய அர்ச்சகர்.
Published on

சோழவந்தான், மே.28-

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்தும், கரும்புத் தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நான்கு ரத வீதிகளில் உருண்டு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி (தீமிதி நிகழ்ச்சி) நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பூக்குழி மைதானத்தில் பூ வளர்த்தனர். நேற்று மாலை அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி மைதானத்திற்கு சென்றடைந்தார்.

அர்ச்சகர் சண்முகவேல் வைகை ஆற்றுக்கு சென்று கரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார். அங்கிருந்து மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி, திரவுபதி அம்மன் கோவில் வடக்கு தெரு, மார்க்கெட் ரோடு வழியாக பூக்குழி மைதானத்திற்கு வந்தார். முதலில் பம்பை இறங்கியவுடன் கரகத்துடன் அர்ச்சகர் சண்முகவேல் பூக்குழி இறங்கினார்.

தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். பால்குடம் சுமந்தபடியும், அலகு குத்தியபடியும், 21 அக்னி சட்டி சுமந்தபடியும், பறவை காவடி எடுத்தும் பூக்குழி இறங்கினார்கள். சிலர் குழந்தையுடன் பூக்குழி இறங்கினார்கள்.

கோ ரதத்தில் பவனி

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், சோழவந்தான் தீயணைப்பு படை அலுவலர் நாகராஜன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் செயல் அலுவலர்கள் சோழவந்தான் ராஜா, திருவேடகம் இளமதி, கோவில் பணியாளர்கள், சங்கங்கோட்டை கிராம மக்கள் ஆகியோர் பூக்குழி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து இரவில் வண்ண நூதன கோ ரதத்தில் அம்மன் நான்கு ரத வீதி பவனி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 2-ம் தேதி தேரோட்டமும், 3-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com