புரட்டாசி பிறந்தது... பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
புரட்டாசி முதல் நாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் செல்லும் பக்தர்கள்
Published on

சென்னை,

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்கின்றனர்.

பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இதனால் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.

பொதுவாக புரட்டாசி புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் மற்றும் பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.

களைகட்டிய புரட்டாசி வழிபாடு

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்கின்றனர். சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாதி கோவில், சௌகார்பேட்டை சென்னகேசவப் பெருமாள் கோவில், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பகவானை தரிசனம் செய்கின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாளை வழிபட்டனர். இந்த கோவிலுக்கு அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பலர் வருகை தருவார்கள். அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனிக்கிழமைகளிலும் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி திருவண்ணாமலையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீபூத நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனி- சிறப்பு ஏற்பாடுகள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளை (19-ந்தேதி) ஆகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமம் இன்றி வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான கோவில்களில் பொது தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் செய்பவர்களுக்காக தனித்தனியாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com