ராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்

சதய விழாவையொட்டி தஞ்சையின் பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் சதய விழா, தஞ்சை பெருவுடையாருக்கு அபிஷேகம்
தஞ்சை பெருவுடையாருக்கு அபிஷேகம்
Published on: 

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

1041-வது சதய விழா

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரிய கோவில் வளாகத்தில் பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 1041 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம் ஆடி மெய்சிலிர்க்க வைத்தனர்.

இரண்டாவது நாளான இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகள் வழங்கினார்.

பேரபிஷேகம்

பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், அரிசி மாவு, நெய், மாதுளை, ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, விளாம்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை பழம், பன்னீர், அன்னம், புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து தேவார இசை நிகழ்ச்சி, தேவார பாடல், பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சதய விழாவையொட்டி தஞ்சையின் பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com