சபரிமலை மண்டல பூஜை தரிசனம்: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

கடைசி நேர பரபரப்பை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து, தரிசனத்துக்கு செல்வது சிறந்தது.
சபரிமலை சுவாமி அய்யப்பன், சபரிமலை மண்டல பூஜை தரிசனம்: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?
சுவாமி அய்யப்பன்
Published on: 

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது.

மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை காலம், நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு துவங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கேரளம் அரசு, தேவஸ்வம் போர்டு இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு, மண்டல விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சுவாமியை தரிசிக்க சுமார் 10 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் பக்தர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

முன்பதிவு தொடங்கியது

அவ்வகையில், மண்டல பூஜை காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, தரிசனத்திற்கான நாளையும், நேரத்தையும் முன்பதிவு செய்கிறார்கள்.

இந்த திருவிழா காலங்களில் நிலக்கல், பம்பை வழியாக கோவிலுக்கு செல்ல தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எருமேலி பெருவழிப்பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதைகள் வழியாக தலா 3 ஆயிரம் பக்தர்கள் வீதம் தினமும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து, தரிசனத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

* சபரிமலை இணையதளத்திற்கு சென்று (www.sabarimalaonline.org), லாகின் செய்து உள்நுழைய வேண்டும். கணக்கு இல்லாதவர்கள் செல்போன் எண் அல்லது இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்கவேண்டும். அதில் உங்கள் முகவரி மற்றும் அடையாள விவரங்களுடன் உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவேண்டும்.

* லாகின் செய்து உள்நுழைந்ததும், தரிசன முன்பதிவுக்கு விர்ச்சுவல்-க்யூ (Virtual-Q) பகுதிக்குச் சென்று, நீங்கள் விரும்பும் தரிசனத் தேதியைத் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் நேரத்தைத் தேர்வுசெய்யவும்.

* ஆதார் போன்ற செல்லுபடியாகும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள விவரங்களைப் பயன்படுத்தி, தரிசனம் செய்யக்கூடிய பக்தரின் விவரத்தை சேர்க்கவும். ஒருவர் பெயர் மட்டும் பதிவு செய்லாம், அல்லது குழுவாகவும் பதிவு பதிவு செய்யலாம்.

* உங்கள் தகவல்களை உறுதிசெய்தவுடன் டிக்கெட் புக்கிங் ஆகும். அதன்பின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யவும். இந்த சீட்டை கோவிலுக்கு செல்லும்போது உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். பக்தர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் (விர்ச்சுவல்-க்யூ பாஸ்) குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, ஒதுக்கப்பட்ட சோதனைச் சாவடியில் ஆஜராக வேண்டும்.

மேலும், இதே இணையதளத்தின் வாயிலாக, கோவிலில் தங்குவதற்கான இடங்கள், சிறப்புப் பூஜைகள் மற்றும் அரவணை அல்லது அப்பம் போன்ற பிரசாதங்களை பெறுவதற்காவும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

X