

ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மிருத்யுஞ்சய சுவாமி சன்னதியில் சிவலிங்கம் நீரில் மூழ்கும் வரை சகஸ்ர கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
ஏழை எளிய மக்களை வறுமையில் இருந்து காப்பாற்ற வேண்டியும், மரண வேதனையில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டியும், சரியான நேரத்தில் மழைப் பெய்ய வேண்டியும், மாநிலம் வளர்ச்சி பெற வேண்டியும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மிருத்யுஞ்சயசாமிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகம் செய்யப்படும் புனிதநீர் வெளியேறாமல் இருக்க மிருத்யுஞ்சய சுவாமி சன்னதி முழுவதும் மண்ணாலும், மண் சுவராலும் துவாரங்கள் அடைக்கப்பட்டன. சன்னதி மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள துவாரம் அருகில் அர்ச்சகர்கள் அமர்ந்து சாஸ்திரங்கள்படி சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
பின்னர், சொர்ணமுகி ஆற்றில் இருந்து 1008 மண் பானைகளில் கொண்டு வரப்பட்ட புனித நீரை, மேற்கூரை துவாரம் வழியாக கீழே கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது (மிருத்யுஞ்சய சுவாமி) ஊற்றி சகஸ்ர கலசாபிஷேகம் செய்தனர். சிவலிங்கம் மூழ்கும் வரை தொடர்ந்து புனிதநீர் ஊற்றப்பட்டது.
நீரில் மூழ்கியவாறு மிருத்யுஞ்சய சுவாமி அப்படியே ஒருநாள் முழுவதும் வைக்கப்படுகிறார். மண்ணால் கட்டப்பட்ட சுவர், ஈரத்தால் ஊறி கரையும்போது, மேகங்கள் மழையாகப் பொழியத் தொடங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
சகஸ்ர கலசாபிஷேகத்தின்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.