

எடப்பாடி:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இக்கோவிலில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் முழு அளவில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்காக ஆலய வளாகத்தில் கால்கோல் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், தீர்த்த குடஊர்வலம், முளைபாரி சமர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்த்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரவிகண்ணா பட்டாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சக்தி விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் கருவறை கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மகாமாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.