சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா.. சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் கோமதி அம்மன் வீதி உலா

தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் கோமதி அம்மன் வீதி உலா
சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் கோமதி அம்மன் வீதி உலா
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா மூன்றாம் நாளில் கோமதி அம்பாள், சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா நேற்று முன்தினம் (ஜூலை 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல் தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

சிவலிங்க அபிஷேக அலங்காரம்

3ம் திருநாளான இன்று காலை சிவபெருமானை சங்கர நாராயணராக காட்சியளிக்க வலியுறுத்தி தவம் இருக்கும் கோமதி அம்பாள், சிவலிங்க அபிஷேக அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இரவு 10 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் கோமதி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

9-ம் திருநாளான 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com