சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா... காளை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

திருவிழாவின் ஒரு பகுதியாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா
காளை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்
Published on

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்தும், கரும்புத் தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மனுக்கு அபிஷேகம்

இந்நிலையில் 13ஆம் நாள் திருவிழா சோழவந்தான் வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின்முறை சார்பில் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு உற்சவ அம்மன், கோவிலில் இருந்து வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின்முறை சங்கத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் உறவின்முறை சங்கத்தில் அம்மனுக்கு 21 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சங்கத்தின் முன்பு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காளை வாகனம்

500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். உறவின் முறை சங்கத்திலிருந்து காளை வாகனத்தில் புறப்பட்ட அம்மன், நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுக பொதுமக்கள் தேங்காய் உடைத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின் முறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com